சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் நாட்டின் பெறுமதியான சொத்தாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களின் உடல் மற்றும் உள நல்வாழ்வைப் பாதுகாத்து, சீரான வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் கற்பனைத் திறன், எதிர்பார்ப்புகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை எதிர்கால நாட்டின் போக்கை தீர்மானிக்கும் காரணிகளாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதி, மதம், பொருளாதார நிலை, புவியியல் பின்னணி உள்ளிட்ட எந்த காரணிகளும் ஒரு சிறுவரின் கல்விக்கும் சீரான வளர்ச்சிக்கும் தடையாக இருக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தமது திறமைகளை வெளிப்படுத்தி, கனவுகளை அடைந்து, விரும்பிய எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக நாட்டின் கல்வி முறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பெற்றோருக்கு சுமையாகவும் பிள்ளைகளுக்கு துன்பமாகவும் இல்லாத, நவீன உலகிற்கு பொருத்தமான திறன் அடிப்படையிலான கல்வி முறையை உருவாக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், கல்விக்கான புலமைப்பரிசில்களை விரிவுபடுத்துவது முதல் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் வளரும் மற்றும் பராமரிப்பு தேவைப்படும் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது வரையிலான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருட்களில் இருந்து இளம் தலைமுறையைப் பாதுகாப்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நிலையற்ற பொருளாதாரத்தின் பாதிப்புகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்து, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சிறுவர் பருவத்தை அவர்களுக்கு வழங்குவதற்காக நாட்டின் பொருளாதாரத்தை நிலையான பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய சிறுவர்கள் தின வாரத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் சிறுவர்களின் உரிமைகள், நல்வாழ்வு, பாதுகாப்பு, கல்வி மற்றும் சுதந்திரத்தை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கும் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதிய இலங்கையில் எந்தவொரு பிள்ளையையும் கைவிடாமல், அனைத்து சிறுவர்களுக்கும் பாதுகாப்பான சூழலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
